கடலுார் : கடலுார் மற்றும் விருத்தாசலம் கோட்டத்திற்குட்பட்ட 654 கிராமப்புற கிளை தபால் நிலையங்களில் தபால் சேவையை விரைந்து வழங்கும் வகையில் ஓரிரு மாதங்களில் கையடக்க மின்னணு கருவி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.
கடலுார் மற்றும் விருத்தாசலம் கோட்டத்தில் 5 தலைமை தபால் நிலையங்கள், 121 துணை தபால் நிலையங்கள், 654 கிராமப்புற கிளை தபால் நிலையங்கள் உள்ளன. கிராமப்புற கிளை தபால் நிலையங்களில் தினமும் மேற்கொள்ளப்படும் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் பணம் செலுத்துவது, அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டத்தில் பணம் செலுத்துவது, சிறுசேமிப்பு திட்டத்தில் பணம் செலுத்துவது, எடுப்பது உள்ளிட்ட விபரங்கள், துணை தபால் நிலையங்களில் கணினியில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
இதற்காக, கிளை தபால் நிலைய ஊழியர்கள் தினசரி பரிவர்த்தனை தொடர்பான விபரங்களை தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள துணை தபால் நிலையங்களுக்கு சென்று வழங்குவது வழக்கம். இதனால், ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதுடன், நேரமும் விரயமாகிறது.வாடிக்கையாளர்களுக்கு அஞ்சல் சேவை கிடைப்பதிலும் தாமதம் ஏற்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு கிளை தபால் நிலையங்களில் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் கீழ், ஊழியர்களுக்கு சுவைப் மிஷன் வடிவில் கையடக்க மின்னணு கருவி வழங்க இந்திய அஞ்சல் துறை திட்டமிட்டுள்ளது.
கடலுார் மற்றும் விருத்தாசலம் கோட்டத்தில் இந்த கருவி கொண்டு வருவதற்கான ஆயத்தப் பணிகள் துவங்கியுள்ளது. முதல்கட்டமாக, மின்னணு கருவி வைக்க பயன்படுத்தப்படும் பாக்ஸ் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதுகுறித்து தபால் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கடலுார் மற்றும் விருத்தாசலம் கோட்டத்திற்குட்பட்ட கிராமப்புற கிளை தபால் நிலையங்களில் கையடக்க மின்னணு கருவி வழங்கப்பட உள்ளது. இதன் மூலமாக, கிராமப்புற தபால் நிலைய ஊழியர்கள், துணை தபால் நிலையங்களுக்கு சென்று தினசரி அஞ்சல் பரிவர்த்தனை தொடர்பான விபரங்களை அளிப்பது தவிர்க்கப்படும்.
மாறாக அவர்களே, மின்னணு கருவியில் பரிவர்த்தனை விபரங்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இதனால், வாடிக்கையாளர்களுக்கும் அஞ்சல் சேவையை விரைவாக வழங்க முடியும். கருவியை பயன்படுத்துவது குறித்து ஊழியர்களுக்கு விரைவில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இத்திட்டம் ஓரிரு மாதங்களில் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது' என்றார்.
No comments:
Post a Comment